Sunday, February 24, 2013

தகழி சிவசங்கர பிள்ளையின் செம்மீன் நாவலின் கதைச் சுருக்கம்



    லகப் புகழ்பெற்ற எழுத்தாளர் தகழியின் செம்மீன், மலையாள இலக்கியத்திற்கு உலகப் புகழை ஈட்டித்தந்த நாவலாகும். மீனவர்களின் வாழ்க்கையை, அவர்களது நம்பிக்கைகளை, அவர்களது பழக்கவழக்கங்களை மிக நுட்பமாகவும் நேர்த்தியாகவும் படைத்திருக்கிறார் தகழி.

நாவலின் ஆதார சுருதி-

கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் பத்திரமாகத் திரும்பி வருவதும் அவர்கள் செல்வச்செழிப்போடு வாழ்வதும் வீட்டிலிருக்கும் அவர்களது மனைவிமார்களின் கற்புநெறி தவறாத ஒழுக்கத்தில்தான் இருக்கிறது . கற்புநெறி தவறினால் கடலம்மா அந்தப் பெண்ணின் கணவனையும் அந்தக் குடும்பத்தையும் அழித்துவிடுவாள் என்பது மீனவர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. கணவன் கடலுக்குச் செல்லும் போது அவரது கற்புள்ள மனைவி கரையிலிருந்துகொண்டு கடலம்மாவிடம் வேண்டிக்கொள்வாள். இதுவே நாவலின் மையக் கருவாகும்.

கதைச் சுருக்கம்-

செம்பன்குஞ்சு என்பவன் ஏழை மீனவன். அவரது மனைவி சக்கி. அவரது மூத்த மகள் கருத்தம்மா. இளைய மகள் பஞ்சமி. சொந்தமாகப் படகும் வலையும் வாங்கவேண்டும் என்பதுதான் அவரது வாழ்க்கை இலட்சியமாக இருக்கிறது..  கருத்தம்மா பரிக்குட்டி எனும் மீன்மொத்த விற்பனையாளரைக் (fish whole saler) காதலிக்கிறாள். பரிக்குட்டி ஒரு முஸ்லிம். செம்பன்குஞ்சு தன் இலட்சியத்தை நிறைவேற்றிக் கொள்ள தன் மகளின் காதலைப் பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார்.

கருத்தம்மாவை அனுப்பி பரிக்குட்டியிடம் படகும் வலையும் வாங்குவதற்கு உதவிகேட்கிறார். உதவி செய்வதற்குப் பரிக்குட்டி ஒரு ஒப்பந்தம் போட்டுக்கொள்கிறான். அந்த ஒப்பந்தம் ...செம்பன்குஞ்சு பிடித்துவரும் மீன்களைத் தனக்குத்தான் விற்கவேண்டும் என்பதுதான். அதற்காகப்  பரிக்குட்டி நிறைய கருவாடுகளை(dry fish) கருத்தம்மாவின் வீட்டிற்குக் கொடுக்கிறான். கருவாடுகளை விற்று சொந்தமாகப் படகும் வலையும் வாங்கிக்கொள்கிறார் செம்பன்குஞ்சு.

ஆனால், ஒப்பந்தப்படி நடந்துகொள்ளவில்லை செம்பன்குஞ்சு. மீன்களை அதிக விலைக்கு   பரிக்குட்டியைத் தவிர மற்றவர்களிடம் விற்றுவிடுகிறார். அதை அறிந்த அவரது மனைவி சக்கியும் அவரது மகள் கருத்தம்மாவும் அவரிடம் சண்டையிடுகிறார்கள்.

நாம் எப்போதுதான் பெரிய விற்பனையாளராவது…இன்னொரு படகும் வலையும் வாங்கவேண்டும். சொந்தமாக வீடு கட்டவேண்டும் என்றெல்லாம் செம்பன்குஞ்சு காரணம் சொல்கிறார்.

மீன் பிடிக்கச் செல்லும்போது மற்றொரு மீனவரான பழநி என்னும் இளைஞனைச் சந்திக்கிறார் செம்பன்குஞ்சு. வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் அனாதை இளைஞன் பழநி. சொந்தமாகப் படகும் வலையும் வைத்திருக்கிறான் அவன். அவனுக்குத் தன் மகள் கருத்தம்மாவைத் திருமணம் செய்துவிட்டு தன் வீட்டோடு வைத்துவிட்டால் தன் மகள் நன்றாக இருப்பதோடு தானும் அவனோடு சேர்ந்து முன்னேறிவிடலாம் என்று எண்ணுகிறார். ஆனால் செம்பன்குஞ்சுவின் மனைவி சக்கிக்கு அதில் விருப்பமில்லை. பழநி அனாதை என்பதால் தயங்குகிறாள். என்றாலும் செம்பன்குஞ்சுவின் விருப்பம் நிறைவேறிவிடுகிறது. திருமணத்திற்கு முன்தினம் கருத்தம்மா பரிக்குட்டியிடம் தன்னுடைய நினைவாகவே இருந்துவிடாமல் வேறு யாரையாவது திருமணம்செய்துகொள்ளச் சொல்கிறாள். ஆனால் பரிக்குட்டி மறுத்துவிடுகிறான்.

திருமணமாகி கருத்தம்மா தன் கணவன் பழநி வீட்டிற்குச் சென்றுவிடுகிறாள்.
பழநியின்  வீட்டுப்பகுதியில் இருப்பவர்கள் கருத்தம்மாவை சந்தேகக் கண்ணோடு பார்க்கிறார்கள். சக்கி தன் மகள் கருத்தம்மாவைப் பார்த்துவிட்டு வருவதற்குக் கேட்கிறாள். ஆனால் அவள் கணவன் மறுக்கிறான். தன் வீட்டோடு தங்காமல் போய்விட்டதற்காக பழநி மீது கோபமாக இருக்கிறார் செம்பன்குஞ்சு. பிறகு சக்கிக்கு உடல் சரியில்லாமல் போய்விடுகிறது. அப்போது தன் வீட்டுப் பக்கமாகச் செல்லும் பரிக்குட்டியிடம் பேசுகிறார் சக்கி. உன்னால் கருத்தம்மாவின் வாழ்க்கைக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது. இனிமேல் நீ அவளுக்கு அண்ணன் என்று பரிக்குட்டியிடம் சொல்கிறார் சக்கி.

 சக்கி இறக்கும்தருவாயில் தன் கணவனை மறுமணம் செய்துகொள்ள வேண்டிக்கொண்டு இறந்துவிடுகிறாள்.

கருத்தம்மா வீட்டிற்குச் செல்கிறான் பரிக்குட்டி . சக்கி இறந்த செய்தியைச் சொல்கிறான். கருத்தம்மா கதறி அழுகிறாள். பரிக்குட்டியைப் பார்த்து அங்கு இருப்பவர்கள் சந்தேகப் படுகிறார்கள். தன் கணவன் பழநியிடம் தன் அம்மா சக்கி இறந்துவிட்ட செய்தியைச் சொல்கிறாள் கருத்தம்மா. எந்தவித உணர்ச்சியுமின்றி நிற்கிறான் பழநி. பழநியும் பரிக்குட்டியை சந்தேகப் படுகிறான்.

தான் பரிக்குட்டியைக் காதலித்த விசயத்தைத் தன் கணவன் பழநியிடம் சொல்லிவிடுகிறாள் கருத்தம்மா. கருத்தம்மா ஒழுக்கங்கெட்டவள் (fallen woman)  என்று  பழநியுடன் கடலுக்குச் செல்ல மற்றவர்கள் மறுக்கிறார்கள். அப்படிச் சென்றாள் அவர்களுக்கும் அவர்களது குடும்பத்திற்கும் ஆபத்து வரும் என்று நினைத்து ஒதுக்குகிறார்கள்.

செம்பன்குஞ்சு பாப்பிகுஞ்சு என்னும் கைம்பெண்ணை மறுமணம் செய்துகொள்கிறார். அப்பா இரண்டாவது திருமணம் செய்துகொண்டது பிடிக்காமல் இளைய மகள் பஞ்சமி வீட்டைவிட்டு வெளியேறி அக்கா கருத்தம்மாவின் வீட்டிற்குச் சென்றுவிடுகிறாள். கருத்தம்மாவிற்கு ஒரு
குழந்தை பிறக்கிறது. ஒரு நாள் பழநி இல்லாத போது இரவில் அவனது வீட்டிற்குப் பரிக்குட்டி வருகிறான். பரிக்குட்டியும் கருத்தம்மாவும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.  காதல்கலந்த உரையாடல் அங்கே நடக்கிறது. பேச்சு கனிந்து கருத்தம்மாவை ஆரத் தழுவுகிறான் பரிக்குட்டி.

கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற பழநி அலையில் சிக்கிக்கொள்கிறான். அப்போது “கருத்தம்மா…” என்று சத்தமாகக் கூப்பிட நினைக்கிறான். ஆனால் தனக்காக கருத்தம்மா வேண்டிக்கொள்வாள். தான் கரைக்குத் திருப்பிச் சென்றுவிடுவோம் என்று நினைக்கிறான். அந்த நேரத்தில் ஒரு பெரிய அலை அவனை இழுத்துக்கொண்டு போய்விடுகிறது.

கடலுக்குச் சென்ற மாமாவும் திரும்ப வரவில்லை. அக்காவையும் காணவில்லை என்ற துயரத்துடன் அடுத்த நாள் காலையில் பஞ்சமி கையில் குழந்தையை வைத்துக் கொண்டு கரையில் அழுதுகொண்டிருக்கிறாள்.  

இரண்டு நாள் கழித்து ….
கருத்தம்மாவின் பிணமும் பரிக்குட்டியின் பிணமும் கட்டிப்பிடித்த நிலையில் கரைவொதுங்கியிருந்தன.
         ----------------------------------------------------





No comments:

Post a Comment