Friday, June 3, 2011

குறும்பட இயக்குநர் - மணிமேகலை நாகலிங்கம்

  யாழினி முனுசாமி
nandri: www.andhimazhai.com
படைப்பு மனம் கொண்டவர்களுக்குச் செய்யும் வேலையும் வருமானமும் மட்டும் நிறைவளிப்பதில்லை படைப்பு வெளிப்பாட்டின் வாயிலாகவே மன நிறைவெய்துகின்றனர். கைப்பணம் செலவழித்தேனும் தன் கலையார்வத்தை வெளிப்படுத்திக் கொள்ளும் குணாதிசயம் படைத்தவர்கள் இந்தக் கலைஞர்கள். குடும்ப முன்னேற்றம் குறித்தெல்லாம் கவலைப்படுவதில்லை அவர்கள். அப்படித்தான், சென்னைத் துறைமுகத்தில் தொழிலாளியாகப் பணியாற்றிவரும் 'மணிமேகலை நாகலிங்கம்', 'ஹைக்கூ தரிசனம்' எனும் குறும்படத்தின் மூலம் தன்னை ஒரு குறும்பட இயக்குநராக வெளிப்படுத்திக் கொண்டுள்ளார். இதற்கு அவர் செலவழித்த தொகை... ஒரு லட்சத்திற்கும் மேல்.

குறும்படம் : ஹைக்கூ தரிசனம்

இக்குறும்படத்தில், மு.முருகேஷ், பா.உதயகண்ணன், வானவன், மணிமேகலை நாகலிங்கம் ஆகிய நான்கு கவிஞர்களின் 36 ஹைக்கூ கவிதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இயக்குநர் மணிமேகலை நாகலிங்கம் இயற்றிய ஹைக்கூ பற்றிய ஒரு பாடலும் தலைப்புப்பாடலாக ஒலிக்கிறது. நா.பூவரசி இக்குறும்படத்தை தயாரித்திருக்கிறார்.

அழகியலை அதிகம் தொடாமல் சமூகமும் அரசியலும் சார்ந்த ஹைக்கூ கவிதைகளே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.



'அறிவியலில்

நூற்றுக்கு நூறு

நோட்டுக்குள் மயிலிறகு'

எனும் ஹைக்கூ முதலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

'அவளின் ஆயுள்

இறந்தும் தொடர்கிறது

நினைவாய் நான்'

எனும் ஹைக்கூ கவிதையுடன் இக்குறும்படம் முடிவடைகிறது.



36 கவிதைகளும் தனித்தனியாக 36 இடங்களில் எடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கவிதையும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டிருப்பது இக்குறும்படத்தின் சிறப்பு.

'எல்லோரும் சாப்பிட்டாச்சு

மனசு மட்டும் நிறைந்த

அம்மா'

எனும் கவிதைக்குப் பொறுத்தமாக வறுமை சூழ்ந்த ஒரு குடும்பமும் அக்குடும்பத்தின் அம்மாவின் மனசும் படம்பிடித்துக் காட்டப்பட்டுள்ளன.

கருவேள மரங்கள் அடர்ந்த பகுதியை திறந்தவெளி கழிவறையாகப் பயன்படுத்தும் கிராமத்து மனிதர்களைக் காட்சிப் படுத்தியிருக்கிறார்.


'கருவேள மரங்கள்

அடர்ந்து வளரட்டும்

வேண்டும் கழிப்பறை'

எனும் கவிதைக்கு.

பல்வேறு நாளிதழ்களில் வந்த காவிரி பற்றிய செய்திகளும் அறிக்கைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

'நீரின்றி

செழித்து வளர்கிறது

காவிரி அரசியல்'

எனும் கவிதைக்கு.

இப்படியான கவிதைகள் இக்குறும்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அ.வெண்ணிலா, சொர்ணபாரதி, வே.எழிலரசு, அமிர்தம் சூர்யா, தமிழ்மணவாளன் போன்ற நவீன கவிஞர்களின் பங்களிப்பும் இக்குறும்படத்தில் உள்ளது.

சுமாரான கவிதைகளையும் நேரத்தையும் குறைத்திருந்தால் இதன் வீச்சு இன்றும் அதிகமாயிருக்கக்கூடும் என்றாலும் பல்வேறு விதமான கருத்துக்களைக் கொண்ட கவிதைகளையும் காட்சிப்படுத்த வேண்டும் என்கிற ஆர்வம் காரணமாக இக்குறும்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

தமிழ் ஹைக்கூ பற்றிய முதல் காட்சி ஆவணம் என்கிற வகையில் இக்குறும்படம் முக்கியமானதாகும்.

இயக்குநர் மணிமேகலை நாகலிங்கம்...

"ஓவியக்கவிஞரான மணிமேகலை நாகலிங்கம் எவ்விதமான செயலிலும் முனைப்போடு உழைப்பவர். அமெச்சூர் நாடக நடிகராக, கவிஞராக, ஓவியராக தன்னை வளர்த்துக் கொண்டவர், இப்போது ஐக்கூக் கவிதைகளைக் காட்சிப் படுத்தி குறும்பட இயக்குநராகவும் பரிணமித்திருக்கிறார்" எனக் 'கல்வெட்டு பேசுகிறது' சிற்றிதழ் இவரை அறிமுகம் செய்கிறது. ஓவியத்திலும் ஈடுபாடு கொண்ட இவர், ஹைக்கூ 'புகைப்படக் காட்சி' ஒன்றையும் சென்னையில் நடத்தியுள்ளார்.

'நினைவுகளோடு', 'நினைவில் நீ' எனும் இரு நூல்களைத் தொகுத்திருக்கிறார்.

இனி, அவருடன் ...

· ஹைக்கூ கவிதைகளை குறும்படமாக்கும் எண்ணம் எப்படித் தோன்றியது?

"அடிப்படையில் நானொரு நாடக நடிகர் ஒவ்வொரு நாடகக் கலைஞருக்குள்ளும் திரைப்பட கனவு இருக்கும். எனக்கும் அத்தகைய சினிமா கனவு இருந்தது. எந்தவொரு செயலுக்கும் ஒரு காரணம் மட்டும் இருக்க முடியாது. என்னுடைய சிறுகதையை குறும்படமாக்க நண்பர் கவின் அவர்களை அணுகினேன். அதில் அவர் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. 5 வரி கதை கேட்டுவிட்டு 50 ஆயிரம் ஆகும் என்றார், நான் 15 ஆயிரத் தான் பட்ஜெட் வைத்திருந்தேன். எனவே அந்த முயற்சி அப்போது கைவிடப்பட்டது.

2002 இல் மு.முருகேஷ் நடத்திய 'ஹைக்கூ திருவிழா' நிகழ்ச்சியில் 'ஹைக்கூ ஓவியக்கண்காட்சி ' நடத்த எனக்கு வாய்ப்பளித்தார். அதன் தொடர்ச்சியாகவும் 'ஹைக்கூ தரிசனம் ' எனும் இக்குறும்படத்தை இயக்கினேன்".

· ஹைக்கூ தரிசனம் எடுக்கும் போது இருந்த உங்கள் மனநிலைக்கும் இப்போதைய புரிதலுக்கும் வேறுபாடுகள் இருக்கின்றனவா?

"ஹைக்கூ கவிதைகளை யாரும் குறும்படமாக்கவில்லை. எனவே, சமூக அக்கறையுள்ள ஹைக்கூ கவிதைகளைத் தேர்வு செய்து குறும்படமாக்கினேன். அப்போது ஆவணப் படங்களில் 'கிரியேட்டிவ்' இல்லை, அது தேவையற்றது என்ற நினைப்பிருந்தது. பாரதி கிருஷ்ணாவின் 'ராமய்யாவின் குடிசை' 'என்று தணியும்' ஆகிய ஆவணப் படங்களைப் பார்த்த பின் அதன் தேவையை உணர்ந்து கொண்டேன். குறைந்த செலவில் கூட நல்ல குறும்படம் எடுக்க முடியும் என்பதை ஆர்.ரவிக்குமாரின் 'எட்டா(ம்) வகுப்பு' படத்தைப் பார்த்து புரிந்து கொண்டேன் கண்ணீர் வரவைத்த குறும்படம் அது".



No comments:

Post a Comment