Friday, June 3, 2011

இயக்குநர் - வ.கௌதமன்

யாழினி முனுசாமி
நன்றி--www.andhimazhai.com

யக்குநர் வ.கௌதமன் 'சினிமாவுக்குப் போன சித்தாளு', 'நீலபத்மனாபனின் எழுத்துச்சித்திரங்கள்', 'பூ', 'மலை', 'ஏரி', 'பனை' ஆகிய குறும்படங்களை இயக்கியிருக்கிறார். வ.கௌதமன் அடிப்படையில் ஒரு திரைப்பட இயக்குநர். 1999ல் "கனவே கலையாதே" எனும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். “மகிழ்ச்சி ”எனும் திரைப்படத்தையும் தற்போது இயக்கி இருக்கிறார். 'நீலபத்மனாபனின் எழுத்துச்சித்திரங்கள்' எனும் ஆவணப்படத்தை, சாகித்ய அகாதெமிக்காக இயக்கினார். சாகித்ய அகாதெமி இந்தியாவின் பல்வேறு மொழிகளில் இதுவரை பல குறும்படங்களையும் விவரணப் படங்களையும் வெளியிட்டுள்ளது. அவற்றில் நீலபத்மனாபனைப்பற்றி 2004இல் வெளிவந்த இந்த விவரணப் படமே சிறந்த படமாக சாகித்ய அகாதெமிக்காரர்களால் பாரட்டப்படுவதாகப் பெருமிதம் கொள்கிறார் வ.கௌதமன்.

35 வயதாகும் இவர் கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர். சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். சமீபத்தில் இவர் மக்கள் தொலைக்காட்சிக்காக இயக்கிய பூ, மலை, ஏரி, பனை குறும்படங்கள் பெறும் வரவேற்பைப் பெற்றன.

வ.கௌதமன் இயக்கிய குறும்படங்கள் பற்றி...

'சினிமாவுக்குப் போன சித்தாளு'

எழுத்தாளர் ஜெயகாந்தனின் 'சினிமாவுக்குப் போன சித்தாளு' குறுநாவலை ஒரு அழகான குறும்படமாக்கியிருக்கிறார். நடிகர்களின் மீதான கவர்ச்சி மோகத்தால் சீரழியும் ஒரு குடும்பத்தின் கதை இது. பணத்துக்காகவும் புகழுக்காகவும் நினைக்கும் ரசிகனை அடித்து நொறுக்கும் குறும்படம் இது.

கணவன் பகலில் வாடகை ரிக்ஷா ஓட்டுபவன். இரவில் தியேட்டரில் பிளாக் டிக்கெட் விற்பவர். அவர் மனைவியோ சித்தாள் வேலை செய்பவள். என்றாலும் ஒருவர் மீது ஒருவர் கொள்ளை அன்பு கொண்டவர்கள். தன்னைவிட தன் தலைவன் (நடிகன்) மீது மனைவி அதிக ஈடுபாட்டுடன் இருப்பதால் அவன் நடித்தப் படத்திற்குப் போக அனுமதி மறுக்கிறான் கணவன். கணவனுக்குத் தெரியாமல் தன் கணவனின் முதலாளியுடன் (ரிக்ஷா உரிமையாளன்) சினிமாவுக்குச் செல்கிறாள். அவனோ அவளை மதுவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கெடுத்துவிடுகிறான். தன் மீது பாசம் கொண்ட கணவனுக்குத் துரோகம் செய்துவிட்டதால் விபச்சார விடுதியிலேயே தங்கி விடுகிறாள். என்றாலும் எந்த ஆணையும் தன்னிடம் சேர்ப்பதில்லை. கணவன் வீட்டிற்கு அழைத்தும், போக மறுக்கிறாள். பிறகொரு நாள் மன உளைச்சலில் பைத்தியமாகிவிடுகிறாள். வீதியோரத்தில் நான்கு பேர் அவளை வண்புணர்ச்சி செய்து கொண்டிருக்கும் ஒரு கொடூர சூழலில் கணவன் மீண்டும் அவளை பார்க்க நேரிடுகிறது. கதறுகிறான். அவளோ தன்னை பலாத்காரம் செய்த தன் கணவனின் முதலாளியை பழிவாங்கப் போவதாகவும் தன் அன்பான கணவனுக்கு துரோகம் செய்துவிட்டதாகவும் அரற்றிக் கொண்டிருக்கிறாள். தன்னுடைய ரிக்ஷாவிலேயே அவளை கை கால்களைக் கட்டி அழைத்துச் செல்வதுடன் கதை முடிவடைகிறது. பார்வையாளர்களைக் கலங்கச் செய்யும் அற்புதமான படைப்பு இது.

தலைவாசல் விஜய் (கணவன்) ஐஸ்வர்யா (மனைவி) தலுக்கான சங்கர் (முதலாளி), பசிசத்யா நடித்திருக்கும் இக்குறும்படம் தமிழிலக்கியவாதிகளிடம் குறும்பட ஆர்வலர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இசை : அரவிந்த், ஒளிப்பதிவு : சிவக்குமார், எடிட்டிங் : பி.லெனின்-வி.டி.விஜயன், வசனம் : த.ஜெயகாந்தன், வ.கௌதமன்.

சமீபத்தில் மக்கள் தொலைக்காட்சிக்காக கவிஞர், பச்சியப்பனின் பூ, மலை, ஏரி ஆகிய மூன்று கவிதைகளையும் பாவலர் வையவனின் 'பனை' கவிதைகளையும் அழகிய குறும்படங்களாக்கி மிகுந்த வரவேற்பைப் பெற்றார். வாழ்க்கையில் எப்போதுமே சிரிக்காத பாட்டி, புகைப்படத்தில் மட்டும் எப்படிச் சிரித்துக் கொண்டிருக்கிறார் என்பதைச் சொல்லும் குறும்படம் பூ.
ஒரு காலத்தில் சிறுவர்கள் விளையாடுவதற்கான இடமாக இருந்து பிறகு கல் குவாரி முதலாளிகளால் வெடிவைத்துத் தகர்க்கப்படும் மலையைக் காட்சிப் படுத்தும் குறும்படம் 'மலை', ஏரிகள் வீடுகளாவதை 'ஏரி' குறும்படமாகவும் எடுத்திருக்கிறார். நேர்த்தியாகவும் அதே நேரத்தில் பார்வையாளர்களின் மனதில் குற்றவுணர்ச்சியையும் ஏற்படுத்தி விடுகின்றன இக் குறும்படங்கள்.

'பனை' கவிதையின் மூலம் மட்டும் பாவலர் வையவனுடையது எனினும் கவிதையாக்கம் செய்தவர் பச்சியப்பன். 'பனை'யின் அருமைப் பெருமைகளைப் பட்டியலிடும் குறும்படம் இது.

இனி அவருடன்.....

கே : குறும்படங்கள் குறித்து உங்கள் கருத்து?


குறும்படம் என்பது ஒரு அற்புதமான விசயம். முழுநீளத் திரைப்படங்களை விடத் தாக்கம் உண்டாக்கும். இன்றைய சூழலில் உலக அளவில் முக்கிய இடம் வகிக்கின்றன குறும்படங்கள். இப்போது நிறைய பேர் குறும்படம் எடுக்க வருகிறார்கள். இதற்கென்று பெரிதாகத் திரைப்பட வடிவமோ, பெரிய நடிகர்களோ, தொழில் நுட்ப வல்லுநர்களோ தேவையில்லை. சாதரண வீடியோ கேமராக்களிலும் கூடச் சமூகச் சிந்தனையுள்ள குறும்படங்களையும் விவரணப் படங்களையும் தரமுடியும் என்பதே இதற்குக் காரணம். கூழ் காய்ச்சிக் குடிப்பதைக் கூட ஒரு அழகான குறும்படமாக எடுக்கலாம். மூளையை கசக்கி யோசித்துத்தான் எடுக்க வேண்டும் என்பதில்லை. எதை வேண்டுமானாலும் எடுக்கலாம். ஆனால் அவை மனதை நெகிழச் செய்வதாக இருக்க வேண்டும்.

கே : குறும்படத்திற்கான கருவை எப்படித் தேர்வு செய்கிறீர்கள்?

வாழ்க்கையைப் பிரதிபலிப்பது தான் கலை. எனது அனுபவத்திலிருந்து இதைச் சொல்கிறேன். எந்த 'தியரி'யும் படித்துவிட்டு நான் இதைச் சொல்லவில்லை. நான் உணர்ந்த வாழ்க்கையைத் தான் பச்சியப்பனின் பூ, மலை, ஏரி கவிதைகளில் செய்தேன். பார்வையாளனின் ஏற்பு தான் வெற்றி. பார்வையாளன் தான் வெற்றியை நிர்ணயிப்பவன். வாழ்க்கையிலிருந்தும் இலக்கியங்களிலிருந்தும் இத்தகைய படங்கள் எடுக்கப்பட வேண்டும். தாகூர் சொன்ன ஒரு கருத்து மிக முக்கியமானது. "அற்புதத்தையும் அழகையும் தேடி உலகம் முழுக்க அலைந்தேன். ஏமாற்றமே மிஞ்சியது. களைத்து வீட்டுக் கூடத்தில் விழுந்தேன். குக்லையில் விழித்த போது, புல் நுனியிலிருந்த பனித்துளியில் கண்டேன்" எனும் தாகூரின் இச்சிந்தனை, படைப்பை நம்மைச் சுற்றித் தேட வேண்டும் என்கிறது. இது தான் எனது கொள்கை.

கே : விவரணப் படங்களுக்குக் கலை நேர்த்தி தேவையா?

விவரணப் படத்திற்கு அழகும் நேர்த்தியும் முக்கியம் தான். ஆனால், கட்டாயமில்லை செல்போனில் எடுத்த சதாமின் மரணதண்டனைக் காட்சி தான் இன்றைக்கு முக்கியமான பதிவாக ,ஆவணமாக இருக்கிறது. சமூக அநியாயங்களை எல்லோரும் இதுபோல் கிடைக்கின்ற கருவிகளைக் கொண்டு பதிவு செய்ய வேண்டும். தகவல்களை வரிசைப்படுத்தித் தர வேண்டும். தெரிந்த செய்திகளாக இருந்தாலும் எல்லாவற்றையும் பதிவு செய்ய வேண்டும். ஏனெனில் அது அடுத்த தலைமுறைக்கான ஆவணம்.

கே : இன்றைய தமிழ்க்குறும்பட விவரணப்பட இயக்குநர்களின் பணி என்னவாக இருக்க வேண்டும் என்று கருதுகிறீர்கள்?

தமிழன் தன் நிலை மறந்து மயக்கத்தில் இருக்கிறான். சூடு, சுரணையற்று மயங்கிக்கிடக்கிறான். ஐம்பதுக்கும் மேற்பட்ட சேனல்கள் இங்குதான் இருக்கின்றன. குடும்பப் பெண்கள் வீட்டிற்கான பொருட்களை ரிமோட்டில் தேடுகிறார்கள். விளம்பரங்களைப் பார்த்து பொருட்களை வாங்கி கணவனின் பணத்தை அழிக்கிறார்கள். ஆண்கள் லஞ்சம் வாங்க இத்தகை பெண்களின் ஆசை தான் காரணம். சினிமா, தொலைக்காட்சித் தொடர்கள், பெரும் பத்திரிக்கைகள் இந்தச் சமூகத்தை சீரழித்துக் கொண்டிருக்கின்றன. இந்தச் சீரழிவுகளையெல்லாம் குறும்பட இயக்குநர்கள் அம்பலப்படுத்த வேண்டும்.

கே : பொதுவாகப் படைப்பாளிகள் சமூக உணர்வை வெளிப்படுத்துவதில் தயக்கம் காட்டுகிறார்களே?

சமூகப் பிரச்சனைகளைப் பேசாத படைப்பாளிகள், படைப்பாளிகளே அல்ல. அவர்கள் தூக்குப் போட்டுக் கொண்டு சாகலாம். இவர்களெல்லாம் சோரம் போன படைப்பாளிகள். முழுக்க முழுக்க குறும்படமாக, பிரச்சாரப் படமாக எடுக்காவிட்டாலும் ஏதேனும் ஒரு சிறு விசயத்தையாவது செய்ய வேண்டும். சமூகச் சீர்கேட்டின் மீது சிறு கோபத்தையாவது வெளிப்படுத்த வேண்டும்.

"கெட்ட விஷயங்கள் நாட்டில் நடக்கிறது அதனால் படமாக எடுக்கிறேன்" என்பவன், "என் வீட்டில் நடந்தது" என்று சொல்ல வேண்டியதுதானே? ஏன் சமூகத்தின் மீதே பழிபோட்டுக் கொண்டிருக்க வேண்டும்?

கே : நீங்கள் திரைப்பட இயக்குநராகவும் இருப்பதால் இக்கேள்வி... இன்றைய தமிழ்த் திரைப்படச் சூழல் பற்றி....?

மைக்கேல் மூர் என்பவர் இயக்கிய ஃபாரன் ஹீட் 9/11 எனும் படம் உலகை உலுக்கியது. இதில் அவன் ஜார்ஜ்புஷ்ஷை அம்பலப்படுத்தியிருக்கிறான். இதற்காக அவனது காலை கூடத் தொட்டுக் கும்பிடலாம். தமிழ்த்திரைப்பட இயக்குநர்களோ இன்னும் ஆம்லெட் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். கருத்து ரீதியாக மாறுபாடு இருந்தாலும் தொழில்நுட்ப ரீதியாக மணிரத்னம், தரமாக எடுக்கிறார். அடுத்து சேரன், தற்போது இலக்கியம் படிக்கும் இளைஞர்கள் திரைப்படத் துறைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். எதிர்கால தமிழ் சினிமா உலகத்தரத்திலிருக்கும். உலக அரங்கில் பேசப்படும்.

கே : இளந்தலைமுறை படைப்பாளிகளுக்கு குறும்பட இயக்குநர்களுக்கும் நீங்கள் சொல்ல விரும்புவது?

படைப்பாளிகளும் தமது பொறுப்பிலிருந்து விலகி தவறு செய்து கொண்டிருக்கிறார்கள். இதை இளம் படைப்பாளர்கள் தான் மாற்ற வேண்டும். அவர்களும் தவறு செய்தால் பூஜ்யத்தில் தான் வந்து நிற்கும்.

கே : உங்களுக்குப் பிடித்த குறும்பட இயக்குநர்கள்?

நல்ல சிறுகதைகளைக் குறும்படமாக்கிய பாலு மகேந்திரா, "நாக் அவுட்" எனும் சிறந்த படத்தை இயக்கிய எடிட்டர் பி.லெனின், ராமைய்யாவின் "குடிசை" ஆவணப் படத்தை இயக்கிய பாரதிகிருஷ்ணகுமார்.




 
                                        

No comments:

Post a Comment