Saturday, May 7, 2011


Previous post
Next post

பம்பைக் கலைஞர் மீஞ்சூர் சுரேஷ் அவர்களுடன் ஒரு நேர்காணல்




தமிழர் பண்பாட்டில் விழாக்களுக்கும் சடங்குகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் முக்கியமான பங்கு உண்டு. திருவிழாக்களிலும் குடும்ப நிகழ்ச்சிகளிலும் வாத்தியக் கருவிகளின் பங்களிப்பு தவிர்க்க முடியாததாக பின்னிப் பிணைந்திருக்கிறது. தமிழர்களின் தொன்மைக் கருவியான “பறை” க்கு அடுத்தபடியாக மக்களால் பெரிதும் விரும்பி வரவேற்கப் படும் இசைக் கருவி பம்பை. பம்பைக் கருவியின் சிறப்புகள் குறித்தும் இன்றைய நிலையில் பம்பைக் கலைஞர்களின் வாழ்நிலை குறித்தும், பம்பை கலைஞர் மீஞ்சூர் சுரேஷ் அவர்களுடன் ஒரு நேர்காணல்........

1.வணக்கம். பம்பையின் சிறப்பினைப் பற்றிக் கூறுங்களேன்.
வணக்கம். பம்பை ஒரு மிக சிறந்த கருவி. இந்தக் கருவி சைவக் கடவுள்களுக்கு வாசிக்கும் ஒரு அருமையான இசைக் கருவி. பெரும்பாலும் நிங்கள் ஆடி மாதங்களில் அம்மன் கோயில்களில் பம்பை அடிப்பதைப் பார்க்கலாம்.

2.மற்ற தோல் கருவிகளுக்கும்; பம்பைக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
மற்ற தோல் கருவிகள் நல்லது கெட்டது என எல்லாவற்றிற்கும் உப யோகப்படுத்துவார்கள் ஆனால் பம்பையைத் தெய்வ வழிபாட்டிற்கு மட்டும் தான் பயன்படுத்துவோம். அது மட்டுமல்ல; மற்ற கருவிகளை எந்தத் தோலில் வேண்டுமானலும் செய்வார்கள். ஆனால் பம்பையை ஆட்டின் தோலில்தான் செய்வோம்.

3.பம்பையின் துணைக் கருவிகளைப் பற்றிச் சொல்லுங்கள்?
முதலில் உடுக்கைதான். அதனுடைய துணைக் கருவிதான் பம்பையும்; சிலம்பும். இந்த மூன்றையும் சேர்த்து வாசிக்கும் போது ஒரு அருமையான இசை தோன்றும். அந்த இசையில் இறைவனே மயங்கி மனிதர்கள் மேலே ஆடி வருவார்.

4.பம்பை ஆட்டத்தைப் பற்றிக் கொஞ்சம் விளக்கமாக்க் கூறுங்கள்?
இந்த ஆட்டம் ஒரு வீர விளையாட்டாகும்.

தீப்பந்தாட்டம்:-
வாயில் மண் ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு கையில் திப்பந்தம் வைத்து ஊதுவர்.

தண்ணீர்க்குடம்:-
ஒரு குடம் நிறைய தண்ணீர் ஊற்றி வைப்பார்கள். அந்தக் குடத்தில் ரூபாய் நோட்டை வைப்பர். அந்தக் குடத்தைத் தனது வாயினால் தூக்கி தண்ணீரைத் தன் மேல் ஊற்றிக் கொள்வோம். பிறகு அந்த ரூபாய் நோட்டை எடுத்துப்போம்.

சோடாபாட்டில்:-
சோடா பாட்டிலைத் திறக்காமல் வைப்பர். அதை நாங்கள் வாயினால் திறந்து சோடாவைக் குடிக்குவிட்டுப் பிறகு அதை மூடிவிடுவோம் ஆனால் அந்த பாட்டிலைத் திறக்கக் கையைப் பயன்படுத்தக் கூடாது. கஷ்டமாக இருக்கும்.

கண்ணினால் ஊசியை எடுப்போம்; நெற்றியினால் செங்கல்லை உடைப்போம். இவற்றை யெல்லாம் செய்யும்போது எச்சரிக்கையாகச் செய்ய வேண்டும். இப்படியெல்லாம் செய்தால் தான் மக்கள் ஒசிப்பார்கள். வெறுமனே பம்பை மட்டும் அடித்துக் கொண்டு போனால் ஒசிக்க மாட்டார்கள்.

5.உங்களுக்கு பம்பை செய்யத் தெரியுமா?
எனக்கு முழுமையாக செய்யத் தெரியாது.

6.எல்லா ஊர்களிலும் ஒரே மாதிரிதான் பம்பை அடிக்கிறார்களா? இல்லை வேறுபாடுகள் உண்டா?
கண்டிப்பாக வேறுபாடுகள் இருக்குது. இத்தொழிலை பரம்பரையாக, புர்விகமாக செய்பவரின் இசை ஒரே மாதிரி தான் இருக்கும். இடையில் வந்தவர்களால் சிறு வேறுபாடுகள் உண்டு. உதாரணத்திற்கு மலையனுரில் அடிப்பவர்கள் மீனவர்கள், அவர்களின் இசை வேற மாதிரியாக இருக்கும். அவர்கள் அடிக்கும் விதம் வேறு மாதிரியானது.

7.சென்ற தலை முறைக்கும் இந்தத் தலைமுறைக்கும் உள்ள ஒசனை எப்படி இருக்கிறது?
சென்ற தலைமுறையில் தான் மதிப்பும் மரியாதையும் அதிகமாக இருந்த்து. முன்பு இருந்த ஒசனை வேறு, இப்போது இருக்கும் ஒசனை வேறு. அதனால் பம்பைக்கான மதிப்பும் மரியாதையும் குறைந்து கொண்டு தான் வருகிறது.

8.உங்களுடைய அடுத்த தலைமுறையினர் பம்பைக் கலையைப் பின்பற்றுவார்களா?
கண்டிப்பாகப் பின்பற்றுவார்கள். நான் என் சொல்றேன்னா, எனது தாத்தாவின் கலையை நான் பின்பற்றினேன். எனது கலையை எனது மகன் பின்பற்றுவான்.

9.பம்பையைக் கற்றுக் கொடுக்க ஏதேனும் பள்ளிகள் நிறுவனங்கள் இருக்கின்றனவா?
இல்லை. எனக்குத் தெரிந்த அளவில் எந்த நிறுவனமும் இல்லை. இனிவரும் காலங்களில் வரலாம் என நம்புகிறேன்.

10.பெண்கள் பம்பை அடிக்கிறார்களா?
இல்லை.

11.இனிவரும் காலங்களில் பெண்கள் பம்பை அடிக்க நேர்ந்தால் நிங்கள் ஏற்பீற்களா?
கண்டிப்பாக ஏற்றுக் கொள்வோம்.

12.குறிப்பிட்ட சாதியினர் தான் பம்பை அடிக்க வேண்டுமா? அல்லது யார் வேண்டு மானாலும் அடிக்கலாமா?
முன்பு கோவில் புசாரி மட்டும் தான் பம்பை அடித்தனர். காலம் மாறும் போது இக்கலையின் மீது உள்ள ஆர்வத்தால், ஈடுபாட்டால், ஆனிசயால் வேறு சில இனத்தவரும் இக்கலையைக் கற்று இத்தொழிலை செய்கின்றனர்.

13.உங்கள் பிள்ளைகள் விரும்பினால் இந்தத் தொழில் செய்ய நிங்கள் அனுமதிப்பிர்களா?
அனுமதிப்பேன். அவனுக்கு நல்ல வருமானம் கிடைத்தால்; அவன் நல்வழியில் சென்றால் கண்டிப்பாக அனுமதிப்பேன். காலங்காலமாக இந்தக் கலை வாழவேண்டும் என்பது தான் எங்கள் ஆசை. பம்பைக் கலைஞர்களுக்கும் இந்தக் கலைக்கும் அங்கீகாரமும் மதிப்பும் கொடுத்து காக்க வேண்டிய பொறுப்பு இந்தச் சமூகத்த்தின் கையில்தான் இருக்கிறது.

14.பம்பைக் கலைஞர்களுக்கும், பம்பை கலை வளர்ச்சிக்கும் தமிழக அரசு எத்தகைய திட்டங்கள் செய்ய வேண்டும் என்று விரும்புகிறிர்கள்?
இக்கலை வளர எங்களுக்கு என்று ஒரு தனிச் சங்கம் அமைக்க வேண்டும். அதில் உறுப்பினராக எல்லாப் பம்பைக் கலைஞர்களையும் ஒன்று சேர்க்க வேண்டும். பம்பைக் கலைஞர்களுக்கென்று தனி வாரியம் அரசு அமைக்க வேண்டும். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஆர்வமுள்ள மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்குப் பயிற்சியளிக்க வேண்டும். குறைந்தபட்சம் அரசு இசைக் கல்லூரிகளிலாவது பம்பையை ஒரு பாடமாகக் கற்றுக் கொடுக்க முன்வர வேண்டும்.

15.ஆர்வமுடைய இளைஞர்கள் உங்களைத் தொடர்பு கொண்டால் பம்பை இசைக் கருவியை வாசிக்கக் கற்றுத் தருவீர்களா?
உங்களுக்கு கற்றுக் கொள்ளும் ஆர்வம் இருந்தால் போதும் அதுவே இக்கலை மீது ஈடுபாட்டை உண்டாக்கும். நிங்கள் கற்றுக் கொள்ளத் தயராக இருந்தால் நான் சொல்லிக் கொடுக்கத் தயாராக இருக்கேன்.

16.எல்லா கோவில்களிலும் பம்பை அடிப்பீர்களா?
இந்து மதக் கடவுள் அனைவருக்கும் இதை வாசிப்போம். அம்மன்; சிவன்; முருகன்; காவல் தெய்வங்கள் போன்றவர்க்கு இசைப்போம். வைணவக் கோயில்களில் இசைக்க மாட்டோம்.

17.எத்தனைத் தலைமுறையாகப் பம்பை அடிக்கிறீர்கள்?
இது ஒரு நகைச்சுவையான கேள்வி, எங்களது பரம்பரை தொழிலே இது தான்.

18.எப்படி இந்தக் கலையில் ஆர்வம் வந்தது.?
இந்த ஆர்வம் பிறப்பிலிருந்துதே இருந்த்து. எனது தந்தை, தாத்தா போன்ற முன்னோர்களின் இசையைக் கேட்டு கேட்டு எனக்கும் ஆர்வம் தானாகவே வந்துவிட்டது.

19.வருமானம் எப்படி இருக்கிறது?
வருமானம் கிடைக்கிறது. ஆனால் அன்று கிடைப்பது அன்றே செலவாகிவிடும். மறு நாள் வேறு ஏதாவது வேலைக்குச் சென்றால் தான் எங்களது பிழைப்பு நடக்கும். அந்த அளவில்தான் இப்போதைக்கு இந்தத் தொழில் உள்ளது.

20.முழு நேரத் தொழிலாக இதைச் செய்ய முடியாதா?
செய்ய முடியாது. இத்தொழிக்கு என்று ஒரு சீசன் உண்டு, ஆடி, மாசி, சித்திரை போன்ற மாதங்களில் வேலை தொடர்சியாக இருக்கும். மற்ற மாதத்தில் ஒன்றோ இரண்டோ தான் வரும்.

கிராமங்கள் இருக்கும்; மக்கள் இருப்பார்கள்;
கோயில்கள் இருக்கும்; மதம் இருக்கும்;
வழிபாடும் இருக்கும்;
ஆனால்..........
இந்தக் கலை இருக்குமா?
காலந்தான் பதில்சொல்ல வேண்டும்
நன்றி. வணக்கம்
நேர்காணல் உதவி; சுகுமார்

nandri : thadagam.com

No comments:

Post a Comment