Saturday, May 7, 2011

தும்பிகள் மரணமுறும் காலம்
யாழினி முனுசாமி

இளம் தலைமுறைக் கவிஞர்களில் கிராமம் சார்ந்த வாழ்வியலைப் பதிவுசெய்பவர்களில் முன்னணியிலிருப்பவர் கவிஞர் பச்சியப்பன். அவரது மூன்று கவிதைத் தொகுப்புகளிலும் கிராமத்தின் இழப்புகள், சிதைவுகள். அதன் உருமாற்றம் குறித்த பதிவுகளே இடம்பெற்றிருப்பினும் இந்தக் கட்டுரை நூல் ஊடாகவும் முழுக்க முழுக்கக் கிராமத்தையே பேசுகிறார். வடதமிழகத்தின் - குறிப்பாகத் திருவண்ணாமலை மாவட்டத்தின் மக்களையும் அம்மாவட்டத்தின் வட்டார வழக்குச் சொற்களையும் அதிகம் தாங்கி வந்திருக்கும் கட்டுரை நூல் இது. அம்மக்களின் கடந்தகால மற்றும் நிகழ்கால வாழ்வியலைக் காட்சிப் படுத்துகிறது இந்நூல், என்றாலும், அனைத்துக் கிராமங்களையும் இந்தக் கட்டுரை நூலின் வழியாகக் காணலாம்.

Pachiappan மீண்டெழுதலை நோக்கமாகக் கொண்டு, வாழ்ந்த கதைகளையும் இழந்த கதைகளையும் ஒரு தேர்ந்த கதை சொல்லியாகச் சொல்லிச் செல்கிறார் பச்சியப்பன். வாசக மனதைச் சுண்டியிழுக்கும் எழுத்து நுட்பத்தைக் கைவரப் பெற்றவர் என்பதை அவரது கவிதைகளுடன் அறிமுக முள்ளவர்கள் நன்கு அறிவர். இந்த உரைநடை நூலின் மூலமாகப் புதிய வாசகர்கள் பலர் அந்த அனுபவத்தை அடைவர் என்பதை உறுதியாக நம்பலாம்.

ஒரு நிகழ்வை நாம் நேரில் பார்க்கும்போது ஏற்படும் தாக்கத்தை விட அதைக் கலை வடிவில் பார்க்கும்போது அதன் தாக்கம் அதிகமாகிவிடுகிறது. கிராமத்தை நாம் நேரில் பார்ப்பதற்கும் அதைப் பச்சியப்பனின் எழுத்தில் காண்பதற்குமான வேறுபாட்டில் அந்தத் தாக்கத்தை நாம் உணர முடிகிறது.

கட்டுரை நூலை ‘படைப்பு’ என்று சொல்லலாமா என்றால், இந்நூலைப் பொறுத்தமட்டில் சொல்லலாம் என்று தோன்றுகிறது. இந்நூலின் நடை அப்படி. கதைக்கும் கட்டுரைக்குமான இடைப்பட்ட, கதைக்கு மிகவும் நெருக்கமான நடையில் இந்நூல் அமைந்திருப்பதை வாசகர்கள் உணரக் கூடும். இத்தகையக் கட்டுரைகளைக் ‘கதைக்கட்டுரை’ எனும் புதிய வகைமையாகக் கூடக் கொள்ளலாம். இருபத்தைந்து கட்டுரைகள் இந்நூலில் உள்ளன. ‘இது கிராமத்து உன்னதங்களின் வீழ்ச்சி குறித்த மனப்பதிவு’ என இந்நூலை வெளியிட்டுள்ள பொன்னி பதிப்பகம் அறிமுகப்படுத்துகிறது.

காலங்காலமாகக் குடியின் கொடூரப் பிடியிலிருந்து விடுபட முடியாமல் மூச்சுத்திணறிக் கொண்டிருக்கிறது கிராமத்தின் ஆன்மா. குடிப்பது நம் மரபு எனக் குடியைப் போற்றும் அறிவாளர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால், குடிக்குத் தன் கணவனையோ, மகனையோ, அப்பாவையோ, சகோதரனையோ பலி கொடுத்தவர்களுக்குத் தானே தெரியும் குடியின் மகத்துவம்? இன்றும் நம் தமிழ்ச் சமூகத்தின் பின்னடைவுக்குக் காரணமாக இருப்பது இந்தக் குடிதானே? முதல் கட்டுரையே இந்தக் குடியின் கொடூரத்தைப் பற்றித்தான். குடியால் கலகலத்துச் சிதைந்துபோன ஒரு குடும்பத்தின் கதையைச் சொல்கிறது அந்தக் கட்டுரை.

இரண்டாவது கட்டுரை காணாமல்போன ஈச்சங்கூடைகளைப் பற்றியும் கூடைப் பின்னி பிழைப்பு நடத்தியவர்களைப் பற்றியும் பேசுகிறது. இப்படித்தான் எல்லாக் கட்டுரைகளும் கிராமத்தின் ஏதோவொன்றைப் பற்றிப் பேசுகின்றன. நிலத்தடி நீரைப் பற்றி, வரப்புச் சண்டையைப் பற்றி, இயற்கை உரத்தைப் பற்றி, மரங்கள் பற்றி...

இன்னும் நிறைய சொல்லிச் செல்கிறார். அத்தனைக் கட்டுரைகளும் முந்தைய செழிப்பையும் இன்றைய அழிவையும் ஒப்பிட்டுச் சொல்லி வாசகர்களைக் குற்றவுணர்ச்சிக்குள்ளாக்குகின்றன.

“ வெட்டுக் குத்துனுதான் அலைவார்கள். ஆனால் ஆபத்து என்றால் ஒருத்தனுக்கு ஒருத்தன் கைகோத்துக் கொள்வார்கள். எதிரி கழனியென்றாலும் மாடுமேய பார்க்க மாட்டார்கள். ஓட்டிவிட்டுதான் மறுவேலை, குழந்தை அழுதால் சொல்லி விடுவார்கள்” (ப. 43) எனவும், “ ஆடோ மாடோ தன் பிள்ளையை வளர்ப்பது போல் வளர்க்கும் குடும்பங்கள் இருந்தன. விளைச்சலில் கூடு கட்டி இருந்தால் சுற்றியிருக்கும் கதிர்களை அறுக்காமல் விட்டுவிட்டு வருகிற மனசைக் கொண்டவர்கள் வாழ்ந்திருந்தார்கள்.

உருட்டிவிட்டுப் போன பூனையை அடித்தால் பாவம்டா விட்டுர்றா என்பார்கள். அதனதன் வாழ்க்கையை அங்கிகரித்த பாசம் அவர்களுடைய தாக இருந்தது” (ப. 79) எனவும் கிராமத்து மனிதர்களின் இயல்புகளை அழகாகச் சொல்லிச் செல்கிறார். எருமையில் சவாரி செய்யும் சிறுவர்களும் ‘வாடா அண்ணா’ என்றழைக்கும் தம்பிகளும் சண்டைக்காகப் பிள்ளை பெற்று வளர்க்கும் பெற்றோர்களும் இந்நூல் நெருக உலவிக் கொண்டிருக்கின்றனர்.

கெடை, ஒணத்தி, சத்தமடித்தல், சுளுவு, மோழி, தரூசி, பெண்ணம்பெரிய, கமலைசால், தோட்டாவண்டி, சேடை, ந்தே... எனத் திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களிக்குரிய பல வட்டார வழக்குச் சொற்களை இந்நூலில் காண முடிகிறது. இது போன்ற வட்டாரச் சொற்களுக்கான பொருளை பின்னிணைப்பாகத் தந்திருக்கலாம். ஏனென்றால் ‘தும்பி’ என்பதே எல்லா மாவட்டத்துக்காரர்களுக்கும் புரியும் என்று சொல்ல முடியாது. தும்பியை ‘தட்டான்’ எனவும் ‘புட்டான்’ எனவும் வழங்குகின்றனர்.

‘மூழ்கி மரித்த கதை’, ‘நண்டு நாற்காலி ஏறுமா?’, ‘பொண்ணு பிடிச்சிருக்கா ராசா’, ‘இன்றிரவு நடத்தப்படும் நாடகம் யாதெனில்’, ‘மருந்து’ போன்ற கட்டுரைகள் குறிப்பிடத் தகுந்தவையாகும். ‘தும்பிகள் மரணமுறும் காலம்’ என்பது கவிதை நூலுக்கான தலைப்பாக இருக்கிறது. ‘மரம்போல்வர் எம்மக்கள்’ எனும் கட்டுரைத் தலைப்பையே இந்நூலுக்கும் தலைப்பாக வைத்திருக்கலாம்.

கருத்து ரீதியாகச் சில விமர்சனங்களை முன்வைக்க வேண்டியுள்ளது. சிறுநிலவுடைமைச் சமூகப் பிரதிநிதியின் குரலாகப் பச்சியப்பன் குரல் ஒரு சில கட்டுரைகளில் ஒலிக்கிறது.

ஆட்டுக்கிடை மடக்குவதன் மூலம் நல்ல விளைச்சலைப் பெற்றுக்கொண்டு, ‘கிடை’ மடக்கியவர்கள் கூலியாகக் குண்டான் நிறைய கூழ், சோறு, வெத்தலை, பொயலை, சுருட்டு, ஒரு ரூபாயோ காசு பெற்றுக் கொள்வதைச் சிலாகித்து எழுதுகிறார் (ப. 34). கூலி கேட்காமல் கூழ் குடித்துவிட்டுக் கொடுப்பதை வாங்கிக் கொண்டுபோனால் மகிழும் நிலக்கிழார் மனசு இதில் வெளிப்படுகிறது. வேறோர் இடத்திலோ கூலி கேட்டால் சலித்துக் கொள்கிறார்.

“வெள்ளம் காய்ச்ச ஆலை ஆடுவது என்றால் நாய் படாத பாடு. மாட்டுக்குச் சோகை வேண்டும் என்பதற்காக நிறைய பேர் கருப்பு வெட்ட வருவார்கள். அவர்களை வைத்தே கழனியிலிருந்து கரும்பை ஆலைகரைக்குத் தூக்கிவந்து விடலாம். இது மாடுகள் நிறைந்திருந்த காலத்தில் நடந்தவை. இப்பொழுதெல்லாம் தொட்டதுக்கெல்லாம் கூலி.” (ப. 57), “சரி, கரும்பு வேண்டாம். வாழைக்கு வருவோம். குழி எடுக்கக் கூலி. கன்று தோண்டக் கூலி. கன்றுக்குக் கூலி (ப. 57) என விவசாயக் கூலிகளுக்குக் கூலி கொடுக்கச் சலித்துக் கொள்ளும் மனம் இதில் வெளிப்படுகிறது.

சோறு போடவும் கூழ் ஊத்தவும் எல்லோருக்கும் மனம் வரும். ஆனால் கூலி கொடுக்கத்தான் மனம் வராது போலும். விவசாய வேலைகளுக்குக் கூலி கொடுக்கவும் புலம்ப வேண்டும்; கிராமத்து ஆட்கள் வேலை தேடி நகரை அடைந்தாலும் ‘அய்யோ! கிராமம் காலியாகிவிடுகிறதே’ என்று புலம்ப வேண்டும். நல்ல கிராமப் பற்று!

சமீபத்தில் கடலூரில் நடந்த உழவுத் தொழிலாளர்கள் மாநில மாநாட்டில் தோழர் ஆர். நல்லகண்ணு குறிப்பிட்ட சில செய்திகளை இங்குக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். “நவீன வேளாண்மை தொடங்கப்பட்டு அறுவை இயந்திரம் வந்துவிட்டது. நிலம் இல்லாத உழவர்கள் பட்டியல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது... தமிழ்நாட்டில் ஆறுகோடி மக்கள் தொகையில் ஒரு கோடி பேர் உழவுத் தொழிலாளர்கள். இவர்களில் பாதிபேர் ஆதிதிராவிடர்கள்” (தமிழ் ஓசை, 2. 9. 07) என்கிறார் நல்லகண்ணு.

அறுவை இயந்திரத்தால் விவசாயக் கூலிகளுக்கு வேலை இழப்பு ஏற்படுகிறது. அவர்களின் வாழ்வாதார உரிமை பறிக்கப்படுகிறது. ஆனால், பச்சியப்பனோ, “ஏக்கர் கணக்கில் என்றால் அறுவை இயந்திரம் கொண்டு அறுக்கலாம்” (ப. 58) என அறுவை இயந்திரத்தை வரவேற்கிறார். அறுவடைக்கு ஆள்வருவதில்லை என்பதைக் காரணமாகச் சொன்னால், ஏன் வருவதில்லை என்ற கேள்விதான் எழுகிறது. பச்சியப்பனின் மொழியில் சொல்வதென்றால், கூலிப் பிரச்சினையன்றி வேறு என்னவாக இருந்துவிட முடியும்?

இந்நூல் கிராமத்தைப் பற்றிப் பேசினாலும் கிராமத்துச் சிக்கல்களை அரசியல் புரிதலுடன், விரிவாகவும் நுட்பமாகவும் பேசவில்லை. வாசகர்களின் மேலோட்டமான உணர்வுகளைக் குறிவைத்து எழுதப்பட்டிருக்கின்றது. இந்திய சாதிய அமைப்பைக் கிராமங்கள் தான் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றன என்கின்றனர் சமூகப் பேராசிரியர்கள். சாதியம் பற்றியோ தலித் மக்களின் கலையான ‘பறை’ யின் அழிவு பற்றியோ இந்நூலில் எவையும் பதிவுகள் இல்லை.

இது கிராமத்து இனிய அனுபவங்களை அசைபோட நினைப்பவர்களுக்கான புத்தகம். கிராமத்து வாசகர்களுக்கான புத்தகம். அந்த அளவில் இந்தப் புத்தகம் ஒரு வெற்றிகரமான புத்தகம் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

தும்பிகள் மரணமுறும் காலம்
ஆசிரியர் : இரா. பச்சியப்பன்,
வெளியீடு: பொன்னி பதிப்பகம்,
2/1758, சாரதி நகர்,
என்ஃபீல்டு அவென்யூ, மடிப்பாக்கம்,
சென்னை - 91, விலை : ரூ. 60.
 நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

No comments:

Post a Comment