Saturday, May 7, 2011

இலக்கிய ஒப்பாய்வு காப்பியங்கள்
யாழினி முனுசாமி

சங்க இலக்கியம் காப்பியம், பிறமொழிக் காப்பியம் குறித்தெல்லாம் அறிந்து கொள்ள இந்நூலில் நிறைய இருக்கின்றன. ஒப்பிலக்கிய ஆய்வில் முக்கியமான நூல்.

மனித குல வரலாற்றில் பத்தொன்பதாம் நூற்றாண்டு பல வளர்ச்சிகளைக் கண்டிருக்கிறது. அரசியல், அறிவியல், தொழில்நுட்பம், கலை இலக்கியம் ஆகிய துறைகளில் உலகந் தழுவிய வளர்ச்சியின் காரணமாக பல புதிய துறைகள் தோற்றம் பெற்றுள்ளன. அவற்றுள் ஒன்று, ஒப்பாய்வு, இலக்கிய ஒப்பீடு அல்லது ஒப்பிலக்கியம் என்றும் ஆய்வு முறையைத் தொடங்கி வைத்தவர் பேராசிரியர் சாட்விக் என்பர். பிரான்சு நாட்டின் சிந்தனை மரபில் தோன்றியது. இன்று தமிழ் உள்ளிட்ட பல்வேறு உலக மொழிகளிலும் பரவி தனித்துறையாக நிலை பெற்றுள்ளது. இத்துறை ஆய்வுகள் தமிழில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அவ்வரிசையில் அ.அ. மணவாளன் ‘இலக்கிய ஒப்பாய்வு: காப்பியங்கள் எனும் ஒப்பாய்வு நூல் முக்கியமானது.

288 பக்கங்களைக் கொண்ட இந்நூலில் ‘தமிழ் முதற் காப்பியமும் பிறமொழி முதற் காப்பியங்களும் - ஒரு பாவிக ஒப்பீடு’ தொடங்கி, ‘தமிழ்க் காப்பிய மரபில் கவியோகி சுத்தானந்தரின் இடம்’ கட்டுரை வரை 14 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இந்நூலிலிருக்கும் ‘தமிழ் முதற் காப்பியமும் பிறமொழி முதற் காப்பியங்களும் - ஒரு பாவிக ஒப்பீடு’ எனும் முதல் கட்டுரையில், காப்பிய இலக்கணம் குறித்தும் தமிழின் முதற் காப்பியமான சிலப்பதிகாரம் குறித்தும் வடமொழி காப்பியங்களான இராமாயணம், மகாபாரதம், கிரேக்கக் காப்பியங்களான இலியதம் (LLiad) ஒடிசி (Odyssey) இலத்தின் காப்பியமான ‘ஈனிட்’ ஆகிய முதற்காப்பியங்களின் பாவிகம் (கருத்து, குறிக்கோள்) மற்றும் தலைமைப் பாத்திரங்களின் பண்பு பயன் குறித்தும் ஒப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. இவ்வாய்வின் வழி பிறமொழி முதற்காப்பியங்களின் மையக் கருத்தை நம்மால் உய்த்துணர முடிகிறது. அக்காப்பியங்களைப் படிக்க வேண்டும் என்கிற உணர்வை ஏற்படுத்துகிறது. இதனையே ஒப்பாய்வின் வெற்றியாகக் கொள்ள முடியும்.

வெவ்வேறு மொழிப் பண்பாட்டு காப்பியங்களின் கதைச் சுருக்கங்களும் தலைமைப் பாத்திரங்களின் குணநலன்களை ஒப்பிடும் வாசிப்பில் விறுவிறுப்பும் கூட்டுகிறது. ஆங்கிலம் மற்றும் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய அனுபவம் இந்நூலுக்குப் பெரிதும் வழிகோலியிருக்கிறது. அவ்வகையில், கம்பராமாயணத்தை மில்டனின் ‘இழந்த சுவர்க்கம் மீண்ட சுவர்க்கம்’ காப்பியங்களுடன் ஒப்பாய்வு செய்திருப்பதை முக்கியமானதாகக் கூறலாம். கி.மு. (70-19)வில் வாழ்ந்த வெர்ஜில் இயற்றிய இலத்தின் மொழியின் ஆதி காவிய ஏனதம் (AENEID). இக்காப்பியத்தின் நாயகன் ஏனியஸ். இவனுடன் இராமனை ஒப்பிட்டு ஆய்ந்திருக்கிறார். தனக்கு நேரடி எதிரியல்லாத வாலியை மறைந்திருந்து கொன்றதால் ஏற்பட்ட இக்கட்டான நிலைபோல ஏனியாஸீக்கும் ஏற்பட்டிருப்பதை விளக்குகிறார். ஒப்பற்ற ரோம் நகரை உருவாக்கும் ஏனியஸின் குறிக்கோளுக்கு உதவிய டர்னஸ் என்பவனை கொன்றுவிடும் இக்கட்டான சூழலை ஒப்பிட்டு ஆய்ந்திருக்கிறார்.

‘சிலப்பதிகாரம் ஒரு பெண்ணிய நோக்கு’ கட்டுரையில் சிலப்பதிகார ஆணாதிக்கக் சொற்களை வெளிக்காட்டியிருக்கிறார்.

‘மாசறு பொன்னே வலம்புரி முத்தே / காசறு விரையே கரும்பே தேனே’ - எனவும் இன்னபிறவுமாய்க் கோவலன் கண்ணகியைப் பாராட்டுவது, பெண்ணை ஆணுக்குரிய நுகர்பொருளாகக் காட்டுவதாகக் குறிப்பிடுகிறார். இப்படிச் சிலம்பை மறுவாசிப்பு செய்து பல கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.

இந்தியாவிலுள்ள பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள், ஆய்வு நிறுவனங்கள், அமெரிக்காவிலுள்ள இந்தியானா, கொலம்பியா பல்கலைக் கழகங்களில் நிகழ்ந்த கருத்தரங்குகள் ஆய்வரங்குகள், பணிப் பட்டறைகள் போன்றவற்றில் படித்தளித்த ஒப்பாய்வுக் கட்டுரைகளைத் தொகுத்து நூலாகத் தந்திருக்கும், டாக்டர் அ.அ. மணவாளன் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளிலும் இலக்கியங்களிலும் புலமை உடையவர் என்பதால் தமிழ், வடமொழி, ஆங்கிலக் காப்பியங்களைத் திறம்பட ஒப்பாய்வு செய்ய முடிந்திருக்கிறது.

சங்க இலக்கியங்கள், காப்பியங்களில் காணப்படும் மகாபாரதச் செய்திகளையும் ஆய்ந்திருக்கிறார். மகாபாரதப் போரில் இருசார் வீரர்களுக்கும் பெருஞ்சோறு அளித்த வள்ளல் என்று சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதனை முரஞ்சியூர் முடிநாகராயர் பாடியதை பின்வரும்
‘ஈர்ஐம் பதின்மரும் பொருதுகளத்து ஒழியப் / பெருஞ் சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்!’ - எனும் புறநானூற்றுப் பாடல்வழி எடுத்துக் காட்டியுள்ளார். இப்படிச் சங்க இலக்கியம் காப்பியம், பிறமொழிக் காப்பியம் குறித்தெல்லாம் அறிந்து கொள்ள இந்நூலில் நிறைய இருக்கின்றன. ஒப்பிலக்கிய ஆய்வில் முக்கியமான நூல் இது.

இலக்கிய ஒப்பாய்வு காப்பியங்கள்
ஆசிரியர் : அ.அ. மணவாளன்,
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை - 600 098, விலை : ரூ. 100.00.


 நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

No comments:

Post a Comment